search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைநகர் டெல்லி"

    தலைநகர் டெல்லியில் இன்று காற்று மாசு மிகவும் மோசமான நிலையை எட்டியதால் பொதுமக்கள் மூச்சுவிட முடியாமல் திணறினர். #DelhiPollution
    புதுடெல்லி:

    நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகனப் புகை மற்றும் அண்டை மாநிலங்களில் கோதுமை அடித்தாள் எரிப்பதால் காற்று மாசு அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவெண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீடுகளில் தெய்வ வழிபாட்டுக்கு ஊதுவத்தி கொளுத்துவதைக் கூட நிறுத்தும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், காற்று மாசு குறைந்தபாடில்லை.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கும்  நிலையில், டெல்லியில் இன்று காலை காற்று மாசு அளவு மிக மோசமான நிலைக்கு சென்றது. காற்றின் தரக்குறியீடு மிக மோசம் என்ற அளவில், 345 என்ற அளவிற்கு மாசு அதிகரித்தது. இது பாதுகாப்பான அளவைவிட 14 மடங்கு அதிகம்.

    இந்த காற்று மாசு அதிகரிப்பு காரணமாக, அதிகாலை நேரத்தில் பனியைப்போல காற்று மாசு மூடியதால் நடைபயிற்சிக்கு சென்றவர்கள் மூச்சுவிட முடியாமல் திணறினர். பலர் முகமூடி அணிந்து சென்றனர். சாலைகளில் புகைமூட்டம் அடர்ந்து காணப்பட்டதால் வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்கினர். நாளை பட்டாசு வெடிக்கும் சமயத்தில் இதைவிட மாசு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.



    மனிதர்கள் சுவாசிப்பதற்கு தேவையான சுத்தமான காற்று உள்ளதா என்பதை ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ் (காற்று தர குறியீட்டு எண்) அளவீடு மூலம் நிர்ணயிப்பது வழக்கம். இது 50-க்குள் இருந்தால் நல்ல காற்று, 51-100 என்ற அளவில் இருந்தால் திருப்தி, 101-200 மிதமானது, 201-300 மோசமானது, 301-400 மிக மோசமானது, 401-500 மிக மிக மோசமானது என்பது குறிப்பிடத்தக்கது. #DelhiPollution
    ×